மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
மும்பையில் இன்று 50,000 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளதை முன்னிட்டு 50 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க உள்ளனர். விநாயகர் சிலைகள் கரைப்பு முன்னிட்டு லால்பாக் ராஜா என்ற பிரமாண்டமான விநாயகர் சிலையை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார்.

50ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட 129 இடங்களில் கடலில் கரைக்கபட உள்ளன. இந்த நிகழ்வில் பல்வேறு மாநிலங்களிலிருந்து திரண்டுள்ள பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த ஊர்வலம் நடைபெறும் பாதைகளில் ட்ரோன் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சாலை போக்குவரத்தை கட்டுபடுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் நகரின் 99 இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.