ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டரை சின்னியம்பாளையம் பகுதியில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழிப்பண்ணை வைத்து சுமார் 5 ஆயிரம் கோழிகளை பராமரித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை கோழிகள் கத்தும் சத்தம் கேட்டதால் அருகே இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது சரவணனின் பண்ணையை சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலி சேதமாகி கிடந்தது. இதனையடுத்து 4 மர நாய்கள் கோழிகளை கடித்து குதறி கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் பண்ணைக்குள் சென்றனர். உடனடியாக மர நாய்கள் அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து அறிந்த சரவணன் விரைந்து வந்து பண்ணைக்குள் சென்று பார்த்தபோது மரநாய்கள் சுமார் 500 கோழிகளை கடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட வனத்துறை வெங்கம்பூர் பகுதி காவலர் மகேஸ்வரி, தாசில்தார் மகேஸ்வரி, அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கோழிகளை பார்வையிட்டனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.