“5 மாதம் நிலுவையில் இருக்கு” ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் உண்ணாவிரதம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

அரசு கல்லூரிகளில் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்ககோரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் இருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இந்த கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்ககோரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கல்லூரியில் வைத்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தினை அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளரான பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், இந்திய மாணவர் சங்க மாநில பொருளாளர் பிரகாஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், வட்டார தலைவர் அலெக்சாண்டர், திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அருள் செல்வம், ஊராட்சி உறுப்பினர் தமயந்தி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அதன்பின் போராட்டத்தின் இறுதியில் ஆங்கில பேராசிரியர் யோகபிரகாசம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதேபோன்று நன்னிலத்தில் அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி இருக்கிறது. இங்கு 60 கவுரவ பேராசிரியர்கள் மற்றும் 8 அலுவலக உதவியாளர்கள் தொகுப்பூதிய முறையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஊதியம் வழங்ககோரி அரசுக்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பேராசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் பல்கலைக்கழகமே ஊதியம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக அரசின் இந்த உத்தரவை ஏற்று அனைத்து பல்கலைக்கழகங்களும் ஊதியம் வழங்கி வருகின்றனர். ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மட்டும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. மேலும் 5 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்ககோரி கல்லூரி வளாகத்தில் கவுரவ பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *