நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு 5 நீதிபதிகள் நியமனம்..!!!

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதிகளின் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக பரிந்துரைகளை அளிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஐந்து நீதிபதிகளின் பெயர்களை இரண்டு மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த பரிந்துரைகளுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்த ஐந்து நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து நீதிபதி பங்கஜ் மித்தல், நீதிபதி சஞ்சய் கரோல், நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், நீதிபதி அசானுதீன் அமானுல்லா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து பேரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் நீதிபதி நியமன விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்று கூறினார். இந்திய அரசியலமைப்பு சட்டம் நமது வழிகாட்டி என்றும் யாரும் யாருக்கும் எச்சரிக்கை விடுக்க முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.