அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று கொண்டார். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் இபிஎஸ் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இபிஎஸ்-க்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய அவர், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் உழைக்க வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக பேசினார். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில் கூட்டணி பேச்சுகளும் அவ்வப்போது கசிந்து வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றது குறிப்பிடத்தக்கது.