முகத்தில் மிளகுத்தூள் “ஸ்பிரே” அடித்த கும்பல்…. டாக்டரிடம் பணம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் காந்திநகரில் சதீஷ்குமார் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி திடீரென வந்த இரண்டு பேர் மருத்துவமனைக்குள் நுழைந்து சதீஷ்குமாரின் முகத்தில் மிளகுத்தூள் ஸ்ப்ரேவை அடித்தனர். இதனையடுத்து கத்திரிக்கோலை சதீஷ்குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பறித்து கொண்டு செல்போன், கார் சாவி ஆகியவற்றை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

இதற்கிடையே சதீஷ்குமாரின் சத்தம் கேட்டு பொதுமக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது பழைய மாமல்லபுரம் சாலை வழியாக தப்பி செல்ல முயன்ற போது கார் மோதி ஒருவர் காயமடைந்தார். மற்றொரு நபர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பிரகாஷ் என்பதும், தப்பி ஓடியவர் வெற்றி செல்வன் என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய வெற்றிச்செல்வன், உடந்தையாக இருந்த பிரதாப், சத்தியசீலன் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சத்தியசீலன் சதீஷ்குமாரின் நண்பர் என்பது தெரியவந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதனையடுத்து சத்தியசீலன் தனது நண்பர்களுடன் இணைந்து பணத்தை பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது.