350 பேருடன் சென்ற ரயில் ட்ரக்கில் மோதி விபத்து.. 36 பேர் பலியான சோகம்.. பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

தைவானில் சுமார் 350 பயணிகளுடன் சென்ற ரயில், ட்ரக்கில் மோதி  விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

தைவானில் இருக்கும் தை துங் நகர் என்ற நகரிற்கு சென்ற ரயில் ஹூலியன் நகரில் விரைவாக சுரங்க பாதையை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ட்ரக்கின் மீது மோதியதில் தடம் புரண்ட ரயில் கடும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் சுமார் 350 பயணிகள் இருந்துள்ளனர்.

இதில் 36 பயணிகள் பலியானதாகவும், 72 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து ரயில் பெட்டிகளில் மாட்டிக்கொண்ட பயணிகளை மீட்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விபத்துக்கு காரணமான ட்ரக் சரியான முறையில் நிறுத்தம் செய்யப்படாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் விபத்து ஏற்பட்ட ரயிலிலிருந்து பயணிகள் அவரவர் உடைமைகளுடன் இறங்கி தண்டவாளத்தில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ரயில் விபத்தானது தைவானில் நடந்த விபத்துகளிலேயே மிகப்பெரிய விபத்தாக கருதப்படுகிறது.