பேனர் வேண்டாம்…. “30 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டேன்”… கமல்ஹாசன்.!!

30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது மற்றும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் 23 வயதான இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றபோது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்- 3 நிகழ்ச்சியின் போது, இது முதல் மரணமல்ல. இனி இதுபோல் நிகழாமல் இருக்க அனைவரும் பாதுகாவலர்களாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.  30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களை வேண்டாம் என்று என் ரசிகர்களுக்கு கூறி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் அஜித் மற்றும் விஜய் பேனர் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .