கர்நாடக மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இளம்பெண்  இறந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத முறையை கடைபிடிக்கிறார்கள். அதாவது திருமணமாகாமல் ஒரு பெண் இறந்து விட்டால் அந்த பெண்ணுக்கு திருமணமாகமல் இறந்த மற்றொரு வாலிபரை திருமணம் செய்து வைக்கிறார்கள். இதற்காக அவர்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கிறார்கள். அதன்படி திருமணம் செய்யாமல் இருந்த ஆண் வீட்டார் மணமகள் வீட்டை தொடர்பு கொள்கிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் திருமணத்திற்கு வேண்டிய ஜவுளி உட்பட அனைத்து பொருட்களையும் எடுக்கிறார்கள். இதைத்தொடர்ந்து இறந்த பெண்ணுக்கும் இறந்த வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதை அவர்கள் குலேய் திருமணம் அதாவது பேய் திருமணம் என்று அழைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதாக நினைக்கிறார்கள். இதே போன்ற ஒரு சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் தற்போது நடந்துள்ளது. அங்கு துளு மொழி பேசும் ஒரு தம்பதியின் மகள் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக சிறுமியாக இருக்கும் போது இறந்துவிட்டார்.

இதனால் தற்போது அவர்கள் தங்கள் பெண்ணுக்கு மணமுடிக்க வரன் தேடி செய்தித்தாளில்  விளம்பரம் கொடுத்த நிலையில் வரன் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இறந்த வாலிபரின் பெற்றோரும் இறந்த பெண்ணின் பெற்றோரும் இணைந்து பேய் திருமணத்தை செய்து வைத்தார்கள். இதன்மூலம் இறந்த ஆன்மாக்கள் அமைதி பெறும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக இறந்த மணப்பெண்ணுக்கும் இறந்த வாலிபருக்கும் திருமண பொருத்தம் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள். அப்படி இருந்தால் மட்டும்தான் திருமணத்தை நடத்துவார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.