நாமக்கல்லில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடல்!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் அடங்கிய அறிக்கை வெளியாகின. அதில், முக்கிய அறிவிப்பாக, தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரி தவிர அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. நாளை (இன்று) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசின் உத்தரவை மீறி 3 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வந்தது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தகவல் பரவியதை தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வையடுத்து தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.