சாலையில் கவிழ்ந்த வேன்…. 3 பக்தர்கள் காயம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 22 பேர் தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு வேனில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை ராஜேஷ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமியை தரிசித்து விட்டு அதே வேனில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்துவிட்டது.

இந்த விபத்தில் ஏழுமலை, சுலோச்சனா, ராஜேஷ் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.