காமன்வெல்த் போட்டிகளில் மாயமான 3 இலங்கை வீரர்கள்…. 2 பேர் இன்று கண்டுபிடிப்பு…!!!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை தடகள வீரர்களில் இருவர் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் நடந்து கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கிறது. 161 நபர்கள் இருக்கும் இந்த அணியில் மூவர் திடீரென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று வீரர்களும் தங்களின் கடவுசீட்டுகளை முன்பே ஒப்படைத்து விட்டனர்.

எனவே, அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்கள் மாயமான பிறகு இலங்கை அணியில் மீதமிருக்கும் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் மாயமானவர்களில் இருவர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இது பற்றி வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அதில், 30 வயதுடைய பெண் ஒருவரும், 40 வயதுடைய ஆண் ஒருவரும் இம்மாதம் முதல் தேதியில் மாயமானார்கள். அவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும், 20 வயதுடைய ஒரு நபர் இன்று மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.