நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் நடைபெறும். இந்த மீன் பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து தினம்தோறும் 2 டன் முதல் 5 டன் வரை 40 வகையான மீன்களும், 5 வகையான இறால், 10 வகையான நண்டுகள் பிடிக்கப்பட்டு அவை கர்நாடகா, கேரளா, ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில் கோடியக்கரை மீனவர் வலையில் நேற்று 3 கிலோ எடை கொண்ட பெரிய கல் நண்டு ஒன்று சிக்கி உள்ளது. அந்த நண்டை எடுத்து பார்த்தபோது அதன் வயிற்றில் ஏராளமான முட்டைகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் மீனவர்கள் உடனடியாக அந்த நண்டை பிளாஸ்டிக் பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் சீர்காழி அருகே தொடுவாயில் உள்ள ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த நண்டு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நண்டு ஒரு வாரத்தில் குஞ்சுகள் பொறித்தவுடன் மீண்டும் கடல் பகுதியில் விடப்படும் என மீனவர்கள் கூறியுள்ளனர்.