தமிழக அரசு பள்ளிகளில் 26 புதிய திட்டங்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம். அதன்படி இனி வருகிற கல்வி ஆண்டில் 150 கோடி நிதி ஒதுக்கீட்டில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

அதன் பிறகு 296 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 596 உயர்நிலைப் பள்ளிகளில் 175 கோடி நிதி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், 13 அரசு பள்ளிகளில் 250 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாதிரி பள்ளிகள், 15 கோடி மதிப்பீட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழாக்கள், ரூ.‌9 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள், மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க 10 கோடி மதிப்பில் மாபெரும் வாசிப்பு இயக்கம், தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள தமிழ் மொழி கற்போம் திட்டம், 6 மற்றும் 8-ம் வகுப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் அரசு பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதனையடுத்து அனைத்து அரசு பள்ளிகளிலும் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்படுவதோடு, ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் 35,847 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, உடலியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளுக்கு கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம், அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான சிறப்பு நூலக ஏற்பாடுகள், மாநில எழுத்தறிவு விருது, புத்தக வெளியீட்டு பணிகள் போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்படும். மேலும் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீட்டில் சிறைச்சாலைகளில் உள்ள எழுத படிக்க தெரியாத 1249 சிறைவாசிகளுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.