தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், திமுக கூட்டணி 200 இடங்களில் வெல்வோம் என்று கூறியதை விமர்சித்திருந்த நிலையில் தற்போதைய தொடர்பாக அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். இது தொடர்பாக செல்லூர் ராஜு கூறியதாவது, பெஞ்சல் புயலை தமிழ்நாடு அரசு சரியாக கையாளவில்லை. வெறும் ஃபோட்டோ ஷூட் மட்டும் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நிவாரண பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படாததோடு அமைச்சர் மீது சேற்றை வாரி இறைக்கும் அளவுக்கு திமுக அரசு செயல் பட்டு கொண்டிருக்கிறது.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று முதலமைச்சரும் திமுக அமைச்சர்களும் சொல்வது  இந்த வருடத்தின் மிகப்பெரிய ஜோக். இவர்களுக்கு மக்களின் மனநிலை தெரியவில்லை. கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது. திமுக அரசின் மீது அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களின் குடும்பம் மட்டும் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.