ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்த பா.ம.க. நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கருத்து தெரிவித்தார். அவர் பேசுகையில், “கடலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க தலைவரை மிரட்டிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்,” என்றார். பின்னர், ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அவர், “பாலாறு அணைக்கு தடுப்பணை, சோளிங்கரில் புறவழிச்சாலை ஆகியவை தேவையென மாவட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு பலமுறை கோரிக்கை வைத்தோம்,” என கூறினார்.
மேலும், பனப்பாக்கத்தில் உள்ள விவசாய நிலங்களை டாடா கம்பெனிக்கு ஒதுக்கியதை விமர்சித்த அவர், “இங்கு வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 80 சதவீத இடம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் டாடா கம்பெனிக்காரர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்,” என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்த கேள்விக்கு, “நல்ல கூட்டணி அமைக்க உள்ளோம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதில் அளிக்க இன்னும் நேரமுள்ளது. அப்போதுதான் பார்ப்போம்,” என்று விளக்கமளித்தார்.