விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகள் குறித்து விரிவாக பேசினார். திமுக, பாஜக கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். விஜய் அதிமுக பற்றிய விமர்சித்து பேசவில்லை. அதிமுக ஆட்சியில் நல்லாட்சி இருந்ததால் தான் விஜய் விமர்சித்து பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே கூறியிருந்தார்.
மாநாட்டில் பேசிய விஜய் வருகிற 2026-வது ஆண்டு தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என கூறியிருந்தார். இதனால் தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். திமுகவுடன் கூட்டணி இருப்பவர்கள் கட்சி மாறுவார்களா என்ற சலசலப்பு நிலவுகிறது. இந்த நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது திமுக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. 2026 தேர்தலில் திமுக இல்லாத ஆட்சியாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறோம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.