ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 பெண்கள் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கழிப்பட்டூரில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான ஷேர் ஆட்டோவை திருப்போரூர் நாவலூர் இடையே ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தசரதன் 10 பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காலவாக்கம் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் தசரதன் சாலை தடுப்பில் இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி எதிர் திசையில் திடீரென பயணிக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிரே மேத்யூ என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்சவள்ளி(53), விஜயா(44) ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.