கவரிங் நகையை பெற்றுக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் செயலாளராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகின்றார். மேலும் கண்காணிப்பாளராக ஜெயஸ்ரீ என்பவரும், நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் என்பவரும் பணிபுரிந்து வருகின்ற 3 பேரும் சேர்ந்து வங்கி உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுக்கொண்டு கடன் வழங்கி உள்ளனர். அவ்வாறு கடன் வழங்கிய பணத்தின் மதிப்பு ரூபாய் 1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆய்வாளர் தலைமையில் இவர்கள் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் மோசடி செய்திருப்பது உறுதியானது. மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலைச்செல்வி மற்றும் விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தலைமறைவான ஜெயஸ்ரீயை வலைவீசி தேடி வருகின்றனர். அதோடு இவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.