“மருத்துவ செலவிற்காக திருடுகிறேன்”…. மூதாட்டியின் காலில் விழுந்து நகை பறித்த 2 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அவ்வையார் தீ பகுதியில் சொர்ணதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி இருக்கிறது. கடந்த 31-ஆம் தேதி வாடகைக்கு வீடு கேட்டு வந்த 2 பேர் மூதாட்டியை வீட்டிற்குள் தள்ளி கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை பறித்தனர். பின்னர் மூதாட்டியின் காலில் விழுந்து பண தேவைக்காக திருடி விட்டதாக பாவமன்னிப்பு கேட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கோவையை சேர்ந்த அஜித், பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அஜித்தின் அம்மா காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பி.பார்ம் பட்டதாரியான அஜித்திற்கு போதிய வருமானம் இல்லை. மேலும் அம்மாவின் மருத்துவ சொல்வதற்காக பணம் தேவைப்பட்டதால் தனது நண்பரான பிரபுவுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. அவர்களிடமிருந்த 8 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.