2 பாட்டிலதான் தள்ளி வைச்சாரு’ …. அதுக்கே கோகோ-கோலா கதைய முடிச்சிட்டாரு ….!!!

போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களுக்கு பதிலாக  தண்ணீர் பாட்டில் வைத்த  வீடியோ ,புகைப்படங்கள் வைரலான நிலையில் கோகோ-கோலா நிறுவனத்திற்கு பெரும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த 2 கோகோ-கோலா பாட்டிலை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டில்களை வைத்தார். அதோடு அவர் வைத்த தண்ணீர் பாட்டில்களை தூக்கி காட்டி  ‘அகுவா’ என போர்ச்சுக்கீசிய மொழியில் குளிர்பானங்களுக்கு பதிலாக மக்கள் தண்ணீர் குடியுங்கள்  என சைகை செய்தார். ஆனால் யூரோ 2020 கால்பந்து தொடருக்கான  ஸ்பான்சர்களில்  கோகோ கோலாவும் ஒன்றாகும். இதற்கு முன்பாகவே ரொனால்டோ பலமுறை துரித உணவுகளுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இவரின்  இந்த செயலால் கோகோ – கோலா நிறுவனத்தின் பங்கு சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கால்பந்து போட்டியில் முடிசூடா மன்னனாக உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை பெற்றுள்ள  ரொனால்டோவின் நேற்றைய செயலால் ஐரோப்பிய பங்கு வர்த்தகத்தில் கோகோ-கோலா நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. பங்குச் சந்தை வர்த்தக தொடக்கத்தில்  கோகோ-கோலா நிறுவனத்தின் மதிப்பு 242 பில்லியனாக இருந்தது. ஆனால் ரொனால்டோவின் இந்த செயல் குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலான ஒரு சில நிமிடங்களிலேயே கோகோ – கோலா நிறுவனத்தின் பங்குகள் 4 பில்லியன் டாலராக சரிந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 29 ,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘The daily star ‘ என்ற பத்திரிக்கை நிறுவனம் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.