2 முறை தப்பிய கில்…. “ஒரே சீசனில் 3 சதம்”…. பிளே-ஆஃப்களில் படைத்த சாதனை என்ன?…. இதோ.!!

குவாலிபயர் 2ல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மான் கில் சதமடித்து பல சாதனைகளை  படைத்துள்ளார்..

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்த தகுதிச் சுற்று-2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. ரித்திமான் சாஹா 16 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் பியூஷ் சாவ்லா பவுலிங்கில் ஸ்டம்பிங் ஆனார். முதல் விக்கெட்டுக்கு ரித்திமான் சாஹா – ஷுப்மான் கில் ஜோடி இணைந்து 6.2 ஓவரில் 54 ரன்கள் சேர்த்தது.

ஆகாஷ் மத்வால் வீசிய 12வது ஓவரில் ஷுப்மான் கில் 3 சிக்சர்களை விளாசினார். அதன்பின் பியூஷ் சாவ்லா வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியும், கேமரூன் கிரீன் வீசிய 15வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியும் விளாசினார் ஷுப்மான் கில். அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் சதம் அடித்தார்.

இதன் மூலம், ரித்திமான் சாஹா (2014 இறுதி), ரஜத் பட்டிதார் (2022 எலிமினேட்டர்) ஆகியோருடன் பிளே ஆஃப் சுற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்த சாதனையை ஷுப்மான் கில் பகிர்ந்து கொண்டார். அதிரடியாக ஆடிய ஷுப்மான் கில் 60 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் குவித்து ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு உறுதுணையாக இருந்த சாய் சுதர்சன் 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து காயத்துடன் ஓய்வு பெற்றார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்னுடனும், ரஷித் கான் 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேஹால் வதேரா 4 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடினார். அவர் மட்டையை சுழற்றி 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து லிட்டில் ஜோசுவா பந்தில் போல்ட் ஆனார்.

சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடிக்கொண்டே இருந்தார். மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவரில் 85 ரன்கள் தேவைப்பட்டது. மோகித் சர்மா வீசிய 15வது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விளாசிய சூர்யகுமார் யாதவ், அடுத்த பந்தை விக்கெட் கீப்பருக்கு பின்னால் திருப்ப முயன்றபோது ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார்.

அதே ஓவரில் விஷ்ணு வினோத்தும் (5) அவுட்டானார். இதன் பிறகு மும்பை அணியின் நம்பிக்கை தளர்ந்தது. 16வது ஓவரில் ரஷித் கான் அதிரடி வீரர் டிம் டேவிட் (2) எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்தார். மோகித் சர்மா வீசிய 17வது ஓவரில் கிறிஸ் ஜோர்டான் (2), பியூஸ் சாவ்லா (0) அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியாக குமார் கார்த்திகேயா (6) அவுட்டாக, மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, நாளை (28ம் தேதி) இதே மைதானத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.

பவர்பிளேயில் விக்கெட் வேட்டை :

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் பவர் பிளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சீசனில் ஷமி இதுவரை பவர்பிளேயில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இந்த பிரிவில் டிரென்ட் போல்ட் 2020ல் மும்பை அணிக்காக விளையாடினார்
16 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

2 முறை தப்பிய கில் :

கிறிஸ் ஜோர்டான் வீசிய 6வது ஓவரில் ஷுப்மான் கில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். அதே ஓவரின் 5வது பந்தை, ஷுப்மான் கில் அடிக்க மிட் ஆன் நோக்கி சென்ற கேட்சை பாய்ந்து பிடிக்க முயன்று டிம் டேவிட்  தவறவிட்டார். அப்போது சுப்மான் கில் 30 ரன்களில் இருந்தார். அதேபோல 11வது ஓவரை கேமரூன் கிரீன் வீச  58 ரன்களில் இருந்த கில் வேகமாக நேராக அடிக்க கிரீன் கேட்சை தவறவிட்டார். இது கடினமான கேட்ச் ஆகும். இந்த இரண்டு வாய்ப்புகளையும் அவர் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

சீசனில் அதிக ரன்கள்:

ஐபிஎல் சீசனில் 851 ரன்களுடன் ஷுப்மான் கில் அதிக ரன் குவித்தவர். அவரைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பாஃப் டு பிளெசிஸ் (730) உள்ளார். இதற்கிடையில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன் சேசர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 2016 தொடரில் 973 ரன்கள் குவித்திருந்தார். இந்தப் பட்டியலில் ஷுப்மான் கில் 851 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

சிறந்த ரன் வேட்டை:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி 233 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இந்த சீசனின் தொடக்கத்தில் லக்னோவுக்கு எதிராக குஜராத்தின் அதிகபட்ச ரன் 227 ஆகும். மேலும், ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையும் குஜராத் அணிக்கு உண்டு. இதற்கு முன் 2014 தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 226 ரன்கள் குவித்திருந்தது.

அதிக சிக்ஸர்கள்:

ஐபிஎல் வரலாற்றில் பிளே-ஆஃப் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சுப்மான் கில் படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் 10 சிக்சர்களை அடித்தார். இதற்கு முன், 2014ல் பஞ்சாப் அணிக்காக இறுதிப் போட்டியில் விளையாடிய ரித்திமான் சாஹா, 8 சிக்சர்களை அடித்திருந்தார்.

இளம் வயதிலேயே சாதனை :

ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் சதம் அடித்த 7வது பேட்ஸ்மேன் மற்றும் முதல் இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். ஷுப்மான் கில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 23 வயது 260 நாட்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் 129 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன், 2014 தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சேவாக், 122 ரன்கள் எடுத்திருந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் தலா 4 சதங்களுடன் விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிக சதம் அடித்தவர்கள். விராட் கோலி இந்த சாதனையை 2016 ஆம் ஆண்டிலும், ஜோஸ் பட்லர் 2022 ஆம் ஆண்டிலும் படைத்துள்ளனர். அவர்களுக்குப் பிறகு ஷுப்மான் கில் இந்த சீசனில் 3 சதங்களை அடித்துள்ளார்.

Leave a Reply