1983 – 2021 ஆம் ஆண்டு வரை….. “1635 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது”…. விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரை தமக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழக முழுவதும் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் 1635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள்காட்டி, ஊழல் வழக்குகளை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே இது சிதைத்து விடும் என தெரிவித்துள்ள நீதிபதி, தேவையில்லாமல் ஊழல் வழக்குகளை ஒத்தி வைக்காமல் விரைந்து விசாரணை நீதிமன்றம் அதனை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்..

இந்த வழக்கை பொறுத்தவரை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலர் ஓய்வு பலன்களை பெற்று விட்டதால் மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கிவிட்டு குற்ற வழக்கும் முடிவுக்கு வந்த பின்னர் மீதம் இருக்கக்கூடிய பலன்களை அவருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்..

இதேபோல நள்ளிரவில் இரு பெண்கள் வசிக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நீடாமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்தும் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றொரு வழக்கில் உத்தரவிட்டுள்ளார்..