சுருக்கு வலைக்கு தடை விதித்தது குறித்து பூம்புகாரில் 18 கிராம மீனவர்கள் ஆலோசனை!

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் 18 கிராம மீனவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி மீனவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட சுறுக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி 18 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூம்புகார் ஆலோசனை கூட்டத்தில் நாகை, கடலூர், விழுப்புரம் மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். சுருக்கு வலைகளை உடனே தடை செய்தால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 3000 ஆயிரம் மீனவர்கள் பூம்புகாரில் ஆலோசனை செய்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததால் இரு தரப்பு மீனவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் சுருக்கு வலைகளை பறிமுதல் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி வலைகளை பறிமுதல் செய்ய சென்ற காவலர்களை மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் அதனை கண்டித்து மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.