குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா…? 16 வயது சிறுவன் மீட்பு…. அதிகாரிகளின் தகவல்…!!

நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி அமலாக்கம் சதீஷ்குமார் தலைமையில், அதிகாரிகள் ஊட்டி மற்றும் கேத்தி பகுதிகளில் இருக்கும் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர் வேலை பார்க்கிறார்களா? என ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊட்டி போன் ஹில் பகுதியில் இருக்கும் நாய் பண்ணையில் 16 வயது சிறுவன் வேலை பார்ப்பது தெரியவந்தது. அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டு பண்ணை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் ஒழிப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1986-ன் படி 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அப்படி பணி அமர்த்தினால் நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம், 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக அறிந்தால் www.pencil.gov.in என்ற இணையதளம் அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக எண் 0423-2232108, சைல்டுலைன் 1098 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.