கேரளா வெள்ளத்தில் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளாவில் கனமழை பெய்து பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.

இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நிலச்சரிவில் சிக்கியும், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் இதுவரையில் 121 பேர் உயிரிழந்ததாக அம்மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 58 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
