தலைநகர் டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் 9 பேர் வசித்து வந்தனர். அவர்கள் நேற்று இரவு வழக்கம்போல் தூங்க சென்ற போது கொசு விரட்டியை வைத்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் கொசு விரட்டி மெத்தையில் விழுந்து அதிக புகையை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிக நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு வெளியேறிய நிலையில் அதனை சுவாசித்த ஆறு பேர் மயக்கம் அடைந்துள்ளனர். மேலும் மெத்தையில் விழுந்த கொசுவிரட்டி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மயக்க நிலையில் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஆறு பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மீதமுள்ள மூன்று பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மீதமுள்ள இரண்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.