கலைஞர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.
கலைஞருக்கு சிலை வைக்க வேண்டியது ஏன் என்று கூற வேண்டுமென்றால் அந்த சிலைகள் அவரது கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும் அண்ணா என்றால் இன உணர்வு, கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
ஆனால் இவை அனைத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய காலம் இப்போது உருவாகி இருக்கிறது. எனவே தான் முன்பைவிட கலைஞர் நமக்கு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறார். சமூக நீதிக்கு பெயர்போன இட ஒதுக்கீடுக்கு கேடு விளைவிக்கும் விதமாக பாஜக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், திறமை போய்விட்டது, வாய்ப்பு போய்விட்டது என்று சொல்லி வந்தவர்கள் இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதும் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று தெரிவித்தார்.
அதேபோலதான் மாநில சுயாட்சிக் கொள்கையை ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அடையாள அட்டை, ஒரே உணர்வு, ஒரே தேர்வு, என எல்லாவற்றிலும் புகுத்தி கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு என்பது இன்று மத்திய படுத்தப்பட்ட அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் 1971ஆம் ஆண்டு மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலத்தில் சுயாட்சி வேண்டும் என்று முழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். இவ்வளவு ஏன் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட நேரத்தில் ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லை, கட்சியைப் பற்றி கூட கவலைபடவில்லை ஜனநாயகம் என்ற உணர்வோடு இது சர்வாதிகாரத்திற்கான தொடக்கம் என்று முழங்கினார் கலைஞர்.
அந்த துணிச்சலையும் தைரியத்தையும் கொள்கை உறுதியையும் நினைவு கூறும் வகையில் அவருடைய நினைவு நாளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், பொருளாதார இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் தாக்குதல், புதுசேரி கவர்னர் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு, சேலம் எட்டு வழி சாலை, சேது சமுத்திர திட்டம், தபால் தேர்வில் இந்தி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, முத்தலாக் சட்டம், மகளிர் மசோதா, விவசாயிகள் கடன், காவிரிப் பிரச்சனை,
அணை பாதுகாப்பு மசோதா, இப்படி பல பிரச்சனைகளை முன்னெடுத்து நம்முடைய பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திமுக சார்பில் மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். மேலும் ஆயிரம் ஆண்டுகளில் அடையவேண்டிய பெருமையை நூற்றாண்டுகளிலேயே அடைந்தவர் தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டி தனது உரையை முடித்துக் கொண்டார்.