மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் 88% பயனர்களுக்கு வங்கிகளின் மூலமே ஊதியம் அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்படும் வகையில் ஆதார் இணைப்பு முகாம்களை நடத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.