10 வீடுகளில் திடீர் விரிசல்…. நில அதிர்வு ஏற்பட்டதா…? அதிகாரிகளின் தகவல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோக்குடல் கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இரவு நேரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவு நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். இதனால் சமுதாயக்கூடம் வீடுகள் உட்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டது என கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த புவியியல் துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, இந்த பகுதி நில அதிர்வால் பாதிக்கப்படக்கூடிய மண்டலம் இல்லை. தற்போது பெய்த கனமழை காரணமாக தண்ணீர் ஊடுருவி பூமிக்கு கீழே சென்றிருக்கலாம். அப்படி செல்லும் போது அதிக அளவு தண்ணீரால் லேசான அதிர்வு ஏற்பட்டு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பில்லர் அமைத்து கட்டிய வீடுகளில் பாதிப்பு இல்லை. எனவே இந்த பகுதியில் தண்ணீர் சரியாக செல்லக்கூடிய வகையில் பாதாள சாக்கடை அமைத்தால் பிரச்சனை இருக்காது என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply