1 கி.மீ தூரம் வாலிபரை துரத்தி சென்று பிடித்த “பெண் போலீஸ்”…. பாராட்டிய பொதுமக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலையத்தில் காளீஸ்வரி என்பவர் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வட மாநில வாலிபர் சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் சந்தேகமடைந்த காளீஸ்வரி வாலிபரிடம் விசாரிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் காளீஸ்வரி வாலிபரை சுமார் 1 கி.மீ விரட்டி சென்று பிடித்து சோதனை செய்த போது அவரது சட்டைப் பையில் 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த ஐபோன் இருந்தது.

இதனையடுத்து வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ என்பதும், அரசு பேருந்தில் பயணியின் விலை உயர்ந்த செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதற்கிடையில் செல்போனை பறிகொடுத்த மாயவேல் என்பவர் காவல் நிலையத்திற்கு வந்து செல்போனை வாங்கி கொண்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சோட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு திருடனை விரட்டி பிடித்த காளீஸ்வரியை தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசாரும், பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.