தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார்.
சென்னையில் ராஜ்பவனில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், ” தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது எழுந்த புகாரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு முழு அதிகாரமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆளுநரிடம் 97 பக்க புகார் பட்டியல் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டி யுள்ளது. அதன் பிறகு இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம். இந்தப் புகார்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.