நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்லும் கனரக வாகனத்தை இயக்கும்போது, ஒரு நொடி கவனச்சிதறல் கூட மரணத்தை விளைவிக்கும் என்பதற்குச் சாட்சியாக ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கனரக வாகன ஓட்டுநர் தனது செல்போனில் மூழ்கியபடி வாகனத்தை ஓட்டிச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. சாலையை கவனிக்காமல் சுமார் 10 வினாடிகளுக்கும் மேலாகத் தனது செல்போன் திரையையே பார்த்துக் கொண்டு அவர் சென்றது, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது. ஓட்டுநரின் இந்த அஜாக்கிரதையான செயலால், கண் இமைக்கும் நேரத்தில் எதிரே சென்று கொண்டிருந்த கார் மீது கனரக வாகனம் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கி, பரிதாபமாக உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது என்பது தற்கொலைக்குச் சமம் மட்டுமல்ல, அது மற்றவர்களைக் கொலை செய்வதற்குச் சமம்” என்று நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருவரின் பொறுப்பற்ற செயலால் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே சிதைந்து போயுள்ளதைச் சுட்டிக்காட்டும் மக்கள், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை போன்ற மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாலை விதிகளை மதிக்காமல் மற்றவர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற நபர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, மற்ற ஓட்டுநர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
He deserves a long prison sentence… pic.twitter.com/J36l41wfrm
— Crazy Videos 🔞 (@CrazyyHub) January 2, 2026
