பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய அரசியல் ஆக்க விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமுமின்றி ஆட்சி செய்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது. மக்கள் மனங்களில் மகிழ்ச்சி என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு. காலை உணவு சாப்பிடும் குழந்தைகள், கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் முகத்தில் நாள்தோறும் உதயசூரியன் உதிக்கிறது என்றார்.

மேலும் நாங்கள் மதவாதத்திற்குத் தான் எதிரானவர்கள், மதத்திற்கு அல்ல. சட்டம் ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது. மதவாதத்தையும் தீவிரவாதத்தையும் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் வட மாநிலத்தவர் மீது 80க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவங்களை பேசி என்ன பயன்?  தமிழ்நாட்டில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ரூபாய் 3,500 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்பிப்பதை அரசு கண்காணிக்கும். பள்ளிவாசல்களுக்காக வழங்கப்படும் மானியம் ரூபாய் 6 கோடியிலிருந்து ரூபாய் 10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். அமைதி பூங்காவாக திகழ்வதால் தான் முதலீட்டாளர்கள் தமிழகத்தை தேடி வருகின்றனர் என்று கூறினார்.