திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஐகோர்ட்டு மதுரை அமர்வு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்த உத்தரவை நிறைவேற்ற மனுதாரர் ராமரவிக்குமார், சக மனுதாரர்கள் மற்றும் இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் மலை உச்சிக்குச் செல்ல முயன்றபோது, அவர்களை போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்துத் தடுத்து நிறுத்தினர்.
நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் தடுப்புகளை உடைத்துச் செல்ல முயன்றதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, தீபம் ஏற்றச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டு, மலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மதத்தை வைத்து இங்கே குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை தமிழ்நாட்டு மண்ணில் பலிக்காது. இது திராவிட மண், தமிழ் மண். அதற்கு நமது அரசும், தமிழ்நாட்டு மக்களும் இடம் கொடுக்க மாட்டார்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
