தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஆய்வக உதவியாளர்கள் 4,300 க்கும் மேற்பட்டோர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இவர்களை ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கற்றல் அளவை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசின் உதவியுடன் அடல் டிங்கரிங் ஆய்வகம், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், பாடப்பொருள் சார்ந்த சோதனைகளை மேற்கொள்ளும் இயற்பியல் மற்றும் வேதியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றது.

ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் பாடத்திட்டத்தின்படி ஆய்வக செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்கள், ஆய்வக பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் வகையில் அவர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் இதர பணிகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.