ஐபிஎல்லில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் விலகியுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளநிலையில், அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைலி ஜேமிசன் இந்தப் போட்டியில் பங்கேற்கமாட்டார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுகுத்தண்டு (அழுத்த முறிவு) காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார். அதன் மூலம் 4 மாதங்கள் ஓய்வில் இருப்பார். எனவே இந்த சீசனில் இந்த வேகப்பந்து வீச்சாளர் விளையாடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

2023 ஐபிஎல் போட்டியில் தங்கள் அணி கோப்பையை வெல்வதற்கு ஜேமிசன் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய சிஎஸ்கே-க்கு இது உண்மையிலேயே ஒரு அதிர்ச்சியான செய்தி. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து அவர் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார். ஜேமிசன் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக சென்னை அணி யாரை வாங்கலாம் என ஆலோசித்து வருகிறது..

ரூ. 15 கோடி : 

இந்த உயரமான ஆல்ரவுண்டருக்காக 2021 ஐபிஎல் மினி ஏலத்தில் உரிமையாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ரூ.15 கோடிக்கு அதிக விலை கொடுத்து வாங்கியது. இருப்பினும்.. அந்த சீசனில் அவர் பெரிதாக ஈர்க்கவில்லை. 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஜேமிசன் ஆர்சிபியால் ரிலீவ் செய்யப்பட்டார். பின் ஜேமிசன் ஐபிஎல் 2023 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸால் அவரது அடிப்படை விலையான ரூ 1 கோடிக்கு வாங்கப்பட்டார். 2023  ஐபிஎல் மார்ச் 31-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அசத்திய ஜெமிஷன் :

ஆறடி ஆறு அங்குல உயரத்தில் நிற்கும் ஜேமிசன், கிவிஸ் பந்துவீச்சு வரிசையில் முக்கிய நபராக உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ICC இன் தொடக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் வெற்றியில் ஜேமிசன் முக்கிய பங்கு வகித்தார்.. இந்தியாவுக்கு எதிரான அந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேமிசன் 19.45 சராசரியில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அறுவை சிகிச்சை காரணமாக அவர் சுமார் 4 மாதங்கள் வெளியில் இருப்பார். இதன் மூலம், மார்ச் மாதம் இலங்கை மற்றும் ஏப்ரலில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்காக அவர் ஆடமாட்டார்..