நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏளூர் ஊராட்சியில் அம்பேத்கர் நகர் புது காலனி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திடமும் இது குறித்து மனு அளித்துள்ளனர்.

இதற்கு இடையே நேற்று குடியரசு தினத்தை ஒட்டி அங்கன்வாடி மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தும் சமுதாய கூட்டத்தை கட்டி தரக்கோரியும் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் கருப்பு கொடியேற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அம்பேத்கர் நகர் புது காலனி மக்கள் கூறியதாவது, அங்கன்வாடி மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது சில வருடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையால் தனிநபர் ஒருவரிடம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக விலைக்கு வாங்கப்பட்டது.

அதன் பின் மக்களுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ள இடத்தை புறம்போக்கு நிலமாக வருவாய் துறை மாற்றி உள்ளது. அங்கு சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் அங்கு அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மனு அளித்துள்ளோம். இருப்பினும் எங்களின் கோரிக்கையை பொருட்படுத்தாமல் மனுக்களை தள்ளுபடி செய்து அங்கன்வாடி மையம் கெட்ட மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதை எதிர்த்து எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.