வியட்நாமில் நுயென் சுவான் பூக் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வருகிறார். அதற்கு முன்பாக அவர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். அவ்வாறு பிரதமராக இருந்தபோது அவருக்கு கீழ் இருந்த மூத்த மந்திரிகள் பலரும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அந்த நாட்டின் 4 அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் பு டிரோங் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.

அதன்படி மூத்த மந்திரிகள், தூதரக அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் விசாரணை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை பிரதமர்கள் இரண்டு பேர் உட்பட ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நுயென் சுவான் பூக்கின் அரசிலும் துணை பிரதமர்களாக இருந்துள்ளனர். அதனால் இந்த விவகாரத்தில் நுயென் சுவான் பூக்கின் பதவியும் பறிக்கப்பட உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் திடீரென நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கட்சியின் பொது செயலாளர் நுயென் பு டிரோங் கூடுதல் பொறுப்பாக அதிபர் பதவியையும் ஏற்பார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது.