தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திலேயே தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்த அவர், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலுக்கு இன்னும் 65 நாட்களே உள்ளதால் நேரத்தை வீணடிக்காமல் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்தத் திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பாஜகவின் மூத்த தலைவர்கள் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, கட்சி வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று பி.எல். சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார். தொண்டர்களுடன் இணைந்து அடிமட்ட அளவில் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும் என அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். டெல்லி தலைமையின் இந்த நேரடி தலையீடும், தேர்தல் தேதி குறித்த முன்னறிவிப்பும் தமிழக பாஜகவினரை இப்போதே தேர்தல் மோடுக்கு மாற்றியுள்ளது.
