சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே, காதலனின் தொடர் மிரட்டலால் மனமுடைந்த தனியார் பள்ளி ஆசிரியை, உருக்கமான மரண வாக்குமூலக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியைச் சேர்ந்த குமார் – விஜயலட்சுமி தம்பதியின் மகள் சண்முகப்பிரியா (22). தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த இவருக்கும், அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கவுதமின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால் சண்முகப்பிரியா அவருடனான காதலைத் துண்டித்துள்ளார். ஆனால், கவுதம் தொடர்ந்து சண்முகப்பிரியாவைத் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததோடு, அவரது தாயார் விஜயலட்சுமியிடமும் பெண் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கவுதம், “சண்முகப்பிரியாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

நேற்று காலை விஜயலட்சுமி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த சண்முகப்பிரியாவின் அக்கா மைதிலிபிரியா, தனது தங்கை மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சண்முகப்பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்முகப்பிரியா தற்கொலைக்கு முன்பு எழுதிய 4 பக்க உருக்கமான கடிதத்தைப் போலீஸார் கைப்பற்றினர். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “எந்தப் பெண்ணிற்கும் இந்த நிலை வரக்கூடாது. இடையில் வந்த அவன் என் வாழ்க்கையை அழித்துவிட்டான். அப்பா இல்லாமல் வளர்த்த உங்களை எல்லார் முன்னாடியும் தலைகுனிய வைத்துவிட்டான்.

நான் வாழ ஆசைப்பட்டேன், ஆனால் அவன் டார்ச்சர் தாங்க முடியவில்லை. என் மானம், மரியாதை எல்லாம் அவனால் போய்விட்டது. அக்கா, எனக்கு ஒன்று என்றால் நீ அவனை சும்மா விடமாட்டாய் என்று தெரியும். அந்த நம்பிக்கையில் தான் இந்த முடிவை எடுக்கிறேன். தயவுசெய்து கவுதமை விட்றாதீங்க. அவன் என்னைச் சித்ரவதை செய்துவிட்டான். நான் செத்தாலும் அவனைச் சும்மா விடமாட்டேன்.”எனத் தனது வேதனையை அந்த கடிதத்தில் கொட்டியுள்ளார்.

இந்தத் தற்கொலை குறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சண்முகப்பிரியாவின் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு, தலைமறைவாக உள்ள காதலன் கவுதமைப் பிடிக்கத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.