தமிழக அரசு பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் மற்றும் தொகுப்பு பொருட்களை அறிவித்துள்ள நிலையில், புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக, பொங்கல் பரிசு அறிவிக்கப்படும் தேதியில் புழக்கத்தில் இருக்கும் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட கார்டுகளுக்கே இந்தச் சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளதால், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு உடனே ஒப்புதல் அளித்து, அவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

​இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள், புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அரசு தரப்பிலிருந்து இதுவரை புதிய விண்ணப்பதாரர்களுக்குப் பரிசு உண்டு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், தேர்தல் நெருங்குவதால் இதற்கான சிறப்பு அரசாணை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால், புதிய கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு ‘இனிப்பான பொங்கல்’ அமையுமா அல்லது ஏமாற்றமே மிஞ்சுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.