அசாம் மாநிலத்தில், அரசுத் துறையில் ஊழலை ஒழிக்க முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா எடுத்துள்ள முயற்சியின் ஒரு பகுதியாக, அசாம் சிவில் சர்வீசஸ் (ACS) அதிகாரியான நூபுர் போரா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, அசாம் போலீசின் விஜி லென்ஸ் மற்றும் அன்டி-கரப்ப்ஷன் பிரிவு அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில், சுமார் ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாகவே, நூபுர் போரா கடந்த ஆறு மாதங்களாக கண்காணிப்பில் இருந்ததாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். அவரிடம் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில், பார்பேட்டா மாவட்டத்தில் வட்டாட்சியராக இருக்கும் போது, பல சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயரில் அரசு நிலங்களை சட்டவிரோதமாக பதிவுசெய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இத்துடன், நூபுர் போராவுடன் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பாக்பர் வருவாய் வட்ட அதிகாரியான சுராஜித் தேகா மீது பல நிலங்களை மோசடியாக வாங்கியதாகவும், போராவுடன் சேர்ந்து சொத்துக்களை குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நூபுர் போரா 2019ஆம் ஆண்டு அசாம் சிவில் சர்வீசஸில் தேர்வு செய்யப்பட்டு, பார்பேட்டா, கர்பி அங்லாங் மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார். அவரின் பணிக்காலத்தில் நிலம் சம்பந்தமான மோசடிகள் இடம்பெற்றதாகவும், அதற்கான ஆவணங்கள் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோரோய்மாரி பகுதியில் அவர் பணியாற்றிய போதும், புதிய புகார்கள் எழுந்ததாகவும், இது மூலமாக பெரிய அளவிலான ஊழல் மற்றும் விதிமீறல்கள் வெளியாகியுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
