இந்தியாவில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவை மட்டும்தான் இந்தியாவில் பல நகரங்களில் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 6 நகரங்களில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 40,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் உள்ள இன்னும் 6 நகரங்களில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை விரிவுபடுத்த இருக்கிறது.