தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடு விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது முதல் மாநாட்டில் அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சிலர் அரசியல் என்றால் என்னவென்று தெரியாது.
மாநாடு என்றால் என்னவென்று தெரியாது. ஏதோ பெயருக்கு வந்த அரசியல் கட்சி என்றெல்லாம் நம் மீது ஏகப்பட்ட கேள்விகளை வீசுவதில் சிலர் அதீத விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதோடு அவர்களின் விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல் மாநாடு அமையும் என்றும் தமிழ்நாட்டில் ஏதோ பெயருக்கு வந்த அரசியல் கட்சி கிடையாது. வீறு கொண்டு எழப் போகிற அரசியல் கட்சி என்பதே நிரூபித்து காட்டுவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரை நேரடியாகவே கடுமையாக விமர்சிக்கிறார்கள். குறிப்பாக திமுக. பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட விமர்சிக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவர்களால் எம்ஜிஆர் ஆக முடியாது என்று கூறுகிறார்கள். அதோடு இன்னும் ஓரிரு அமாவாசைகள் மட்டும் தான் அவருடைய கட்சி தாங்கும் என்றும் அதன் பிறகு கட்சியை கலைத்து விடுவார்கள் என்றும் மறைமுகமாக திமுகவினர் விமர்சித்திருந்தனர்.
அதே சமயத்தில் நேற்று இந்து மக்கள் கட்சியினர் நடிகர் விஜயின் முதல் மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் இளைஞர்களை வேலையை விட்டு மாநாட்டுக்கு வரவேண்டும் என புஸ்ஸி ஆனந்த் கூறியதற்கு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை எனில் அவருடைய வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் இப்படி நடிகர் விஜய் இன்னும் முதல் தேர்தலை கூட சந்திக்காத நிலையில் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் பொழிந்து வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளது அவருடைய தவெகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.