“வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி”…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்து இருக்கும் வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று திரண்டு தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். இவர்களைப் பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கூறியதாவது, வன்னியபாறைப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்டி முப்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றோம்.

நாங்கள் 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றன நிலையில் நாங்கள் வசிக்கும் இடத்திற்கு உட்பிரிவு செய்து வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாலுக்கா அலுவலகத்தில் பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. மேலும் அடிப்படை வசதிகளும் எங்களுக்கு இல்லை. ஆகையால் 30 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கவும் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என அவர்கள் கூறினார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி மனுக்களை கொடுக்க அனுப்பி வைத்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.