“வீட்டில் பேய் இருப்பதாக உணவு அருந்தாமல் இருந்த 2 பெண்கள்”… அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்…!!!

பேய் இருப்பதாக வீட்டில் உணவு அருந்தாமல் படுத்த படுக்கையாக இருந்த இரண்டு பெண்கள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த 55 வயது பெண் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவரின் அக்கா ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவரின் மகளுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். அந்த மகள் பிஎஸ்சி பிஎட் பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் அந்த இளம் பெண்ணின் தாய் எனவும் பில்லி சூனியம் வைத்து இருப்பதாகவும் கூறி வீட்டில் இருந்த பொருட்கள் பலவற்றை வெளியே வீசிவிட்டு இவர்களும் வீட்டுக்குள் வசிக்காமல் வீட்டின் வெளியே ஒரு தாழ்வான பகுதியில் சாப்பாடு உட்கொள்ளாமல் படுத்தே இருந்து வந்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்காததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் நுழைந்த போது வீட்டிற்குள் ஆங்காங்கே மஞ்சள் தடவிய தேங்காய் எலுமிச்சை பழம் உள்ளிட்டவை இருந்துள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த இடத்தில் அவர்கள் படுத்தபடியே இருந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எங்களுக்கு யாரும் தேவையில்லை என கூறி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அப்போதும் அவர்கள் கேட்காததால் உறவினர்கள் மூலம் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் போலீசார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.