விலங்குகளுக்கும் தடுப்பூசி ரெடி…. கண்டுபிடித்து அசத்திய நாடு…. குவியும் ஏற்றுமதி வேண்டுகோள்…!!!

உலகில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களை மட்டுமல்லாமல் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் விலங்குகளுக்கான முதல் தடுப்பூசியானா கார்னிவாக் கோவ் என்ற மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய மூத்த அதிகாரி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கார்னிவாக் கோவ் தடுப்பூசி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலாக நாய், பூனைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்று கூறினார்.மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளித்துள்ளது என்றும் கூறினார். கார்னிவாக் கோவ் தடுப்பூசியை அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுள்ளன என்றும் இதனால் ஏப்ரல் மாதம் முழுவதிலும் தடுப்பூசிகள் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.