விருப்பமில்லாத திருமணம்… 24 நாட்களில் முடிந்த வாழ்க்கை… புதுமணப்பெண் விபரீத முடிவு…!!!

திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யு என்ற பகுதியில் ஜெயராமன் (25) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா (21) என்ற பெண்ணை கடந்த மாதம் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ரக்சனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதன் பிறகு இரவு அவரின் மாமியார் வசந்தா, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தனது மருமகள் ரக்சனா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், ரக்சனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது தந்தையின் செல்போனுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை தனது தந்தைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 24 நாட்களே ஆன நிலையில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.