விதிமுறை மீறல்…. ஓராண்டு தடை… ஒரு கோடி அபராதம்… இலங்கை அணி வீரர்களுக்கு அதிரடி தண்டனை…!!

கொரோனா விதிமுறைகளை மீறிய இலங்கை அணி வீரர்கள் 3 பேருக்கு ஒரு வருடம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரின் போது இலங்கை அணியின் துணை கேப்டன் குஷால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியில் சுற்றினர். தங்கியிருந்த ஹோட்டலை விட்டு அவர்கள் வெளியேறியது மிகப் பெரிய சர்ச்சையாக மாற, இதுகுறித்து 5 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டதில், விதிமுறைகளை அந்த வீரர்கள் மீறியது உண்மை என தெரியவந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வீதியில் சுற்றித்திரிந்த காரணத்திற்காக இவர்கள் 3 பேருக்கும் ஒரு கோடி இலங்கை ரூபாய் அபராதமும், ஓராண்டுக்கு சர்வதேச போட்டிகளிலும், ஆறு மாதம் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.